கோவையில் கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக கூறி வதந்தி பரப்பிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொறுப்பாளர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆற்றுப்பாலம் அருகே சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக வதந்தி பரவியது. இதையடுத்து லாரியை நிறுத்திய பொதுமக்கள், மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கண்டெய்னரில் தேயிலைத் தூள் பெட்டிகள் இருப்பது தெரிய வந்தது. வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய தேயிலைத் தூள் கொண்டு செல்லப்படுவதும் உறுதி செய்யப்பட்டது.
இதனிடையே பணம் இருப்பதாக கூறி வதந்தி பரப்பியது யார் என்று போலீசார் விசாரணை நடத்தினர். மக்கள் நீதி மய்யம் பொறுப்பாளர் முகமது சாஜித் உட்பட 2 பேர் வதந்தி பரப்பி, பொதுமக்களை தூண்டி விட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
அவர்களை 23ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.