தற்காப்பு கலை என்பது ஆண், பெண் இருபாலருக்கும் மிகவும் முக்கியமானதாகும். அந்த வகையில் தற்காப்புக் கலையின் முக்கியத்துவத்தினை உணர்ந்து, சிறு வயதிலேயே தற்காப்புக் கலையில் சாதனை படைத்து வருகின்றனர் இரட்டையர்கள்.
காரைக்காலை பூர்விகமாகக் கொண்ட தம்பதியினர், சென்னையில் கடந்த சில தினங்களாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 8 வயதுடைய ஸ்ரீஹரினி என்ற மகளும், ஸ்ரீவிசாகன் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் இரட்டையர்கள் ஆவார்கள். இந்த இரட்டையர்களுக்கு, சிறு வயது முதலே தற்காப்புக் கலையில் மீது ஆர்வமிருந்ததால், 3 வயது முதல் கராத்தே பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இரட்டையர்களாக இருந்தாலும் ஆண்,பெண் வேறுபாடு இல்லாமல், ஹரிணி, விசாகனுக்கு ஈடாக போட்டி போட்டுக் கொண்டு தற்காப்புக் கலையை கற்றுகொண்டார். இதன் உச்சகட்டமாக, இருவருமே கராத்தே, குங்ஃபூ, பாக்சிங், கிக் பாக்சிங், சிலம்பம், ஜூடோ, டேக்குவண்டோ உள்ளிட்ட பல கலைகளை தங்கள் வசப்படுத்தியுள்ளனர்.
இவர்களின் கடுமையான பயிற்சியால், இந்தியாவில் முதல் முறையாக, 6 வயதில் இரண்டு ப்ளாக் பெல்ட் பெற்ற இரட்டையர்கள் என்ற சாதனையை படைக்க வைத்துள்ளது. மேலும், இந்தியா மற்றும் சர்வதேச அளவில், 200க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று, வீடு முழுவதையும் பதக்கங்களால் நிறைத்துள்ளனர்.
தொடர்ந்து, மாவட்டம், மாநிலம் என ஜொலித்த இருவரும், மலேசியா, இந்தோனேசிய என நாடு கடந்து, சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்று, முத்திரை பதித்து வருகின்றனர். கடந்த மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் பங்கு பெற்ற ஸ்ரீவிசாகன், குமுத்தேவில் முதல் பதக்கமும், கட்டாவில் இரண்டாம் பதக்கமும் வென்றுள்ளார். அதேபோல் ஸ்ரீஹரினி கட்டாவில் முதல் பதக்கமும், குமுத்தேவில் இரண்டாம் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார்.
இவர்கள் இருவரின் ஒரே நோக்கம், ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு, இந்தியாவிற்கு பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே. கடந்த 29 ஆம் தேதி, சென்னை ஐ.சி.எஃப்பில் நடைப்பெற்ற சென்னை ஓப்பன் போட்டியில், 14 வயதுக்குட்ப்பட்டோர் பிரிவில் கலந்துகொண்டு, தன்னை விட மூத்த வீரர்களோடு மோதி, மூன்றாம் இடத்தை பிடித்தனர். இவர்களின் சாதனைகளை பாராட்டி, யுனிவர்சல் புக் ஆப் ரெக்ராடு மற்றும் சர்வதேச பல்கலைகழகம் இணைந்து, சாதனையாளர் பட்டம் கொடுத்து கவுரவித்துள்ளது. இவர்கள் சிறார்களாக இருந்தாலும், இவர்களின் சாதனையோ பெரியதுதான்..
Discussion about this post