ராமநாதபுரம் மாவட்டத்தில் நீர்நிலைகளில் காணாமல் போனவர்களை மீட்பதற்காக மிதவை சைக்கிளை இரட்டையர்கள் உருவாக்கியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் விசைப்படகுகளைக் காட்டிலும், நாட்டுப்படகு மீனவர்களே அதிகம் உள்ளனர். சிறிய ரகப் படகுகளை பயன்படுத்தி கரையோரங்களில் மீன் பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள், அலையில் அடித்துச் செல்லப்படும் அபாயம் அதிகம் உள்ளது. ((அதேபோல கீழக்கரை, ஏர்வாடி கடற்கரைப் பகுதிகளுக்கு சுற்றுலாச் செல்பவர்கள் ஆபத்தை உணராமல், கடலில் விளையாடும் போது அலைகளில் சிக்கி இழுத்து செல்லப்படும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி, ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரணி, குளங்கள், ஏரிகளில் குளிக்கச் செல்பவர்களும் நீரில் மூழ்கி அவ்வப்போது உயிரிழக்க நேரிடுகிறது.
இவ்வாறு நீரில் சிக்கியவர்களை மீட்பதற்கு எளிய கருவி ஒன்று இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணினர் கீழக்கரையைச் சேர்ந்த இரட்டையர்களான அசாருதீன், நசுருதீன். ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களான இருவரும் தாங்களே சுயமாக வடிவமைத்து ஒரு வாகனத்தை உருவாக்கினர்.
அப்படி அவர்கள் உருவாக்கியது தான் மிதவை சைக்கிள். 180 கிலோ எடைகொண்ட இந்த மிதவை சைக்கிள், 3 பேர் வரை பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 10 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய திறன் கொண்டது. கடலில் சிறிது தொலைவு மட்டுமே இந்த மிதவை சைக்கிளை இயக்க முடியும் என்றும், குளத்தில் மூழ்கியவர்களை 100% காப்பாற்ற முடியும் என்றும் இருவரும் கூறுகின்றனர்.
அடுத்தகட்டமாக, என்ஜின் பொருத்தி இயக்கும் முயற்சியை முன்னெடுப்போம் என்றும் இவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.