தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வட்டாட்சியர் மற்றும் காவல்துறை ஆய்வாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, வன்முறையை தடுக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், தூத்துக்குடியில் முகாமிட்டுள்ள சிபிஐ அதிகாரிகள், சிப்காட் போலீஸ் நிலையம், ஆயுதப்படை வளாகம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வழக்கு தொடர்பாக ஆவணங்களை சேகரித்தனர்.
இதைத்தொடர்ந்து, துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்ட போது பணியில் இருந்த வட்டாட்சியர் சந்திரன், துணை வட்டாட்சியர் கண்ணனிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது தூத்துக்குடியில் பணியில் இருந்த காவல் ஆய்வாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.