தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலாயுதபுரத்தை சேர்ந்தவர் சுபா. பிரசவத்திற்காக இவர் கடந்த 25 ஆம் தேதி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 28.06.2021 காலை 11 மணி அளவில் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இரவு 8 மணியளவில் திடீரென வலிப்பு ஏற்பட்டு சுபா பரிதாபமாக உயிரிழந்தார்.
மருத்துவர்களின் கவனக்குறைவாலும், அலட்சியத்தாலும் சுபா உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர். தகவலறிந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் மருத்துவமனைக்கு சென்று உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், சுபாவின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ, பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுபா உயிரிழந்தது குறித்து மருத்துவத்துறை முறையான விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தினார்.
உயிரிழந்த சுபா குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.