கொற்கையில் நடைபெறும் அகழாய்வுப் பணியில், தொடர்ந்து அதிசயங்களும், ஆச்சர்யங்களும் நீண்டுகொண்டே செல்கின்றன. புதிய புதிய கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில், ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கையில், தொல்லியல் அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. 75 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கொற்கையில் தொடங்கப்பட்ட அகழாய்வு பணிகள், கடந்த 4 மாத காலமாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆய்வின்போது, குழியில் சுடுமண்ணால் செய்யப்பட்ட விலங்கு உருவம், சுடுமண் புகைப்பான், கண்ணாடி உருக்கு கழிவுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் திரவப்பொருட்கள் வடிகட்டும் 4 அடுக்கு கொண்ட சுடுமண் குழாய் கண்டுபிடிக்கப்பட்டது.
அது தற்போது 6 அடுக்காக பூமிக்குள் செல்கிறது. இதே போல் கண்டுபிடிக்கப்பட்ட 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான 7 அடுக்கள் கொண்ட செங்கல் கட்டுமான அமைப்பு, தற்போது10 அடுக்குவரை பூமிக்குள் நீண்டுகொண்டே செல்கிறது.
செங்கல் கட்டுமானம் மற்றும் திரவ பொருட்கள் வடிகட்டும் குழாய் அமைப்புகள், பூமிக்குள் நீண்டு செல்வதால், இன்னும் பல்வேறு வரலாற்று உண்மைகள் வெளிவரக் கூடுமென்று தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.