தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷங்களில் ஒன்று நடிகை மனோரமா. எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதனை இம்மிபிசகாமல் செய்வதில் மனோரமாவை விட்டால் யாரும் இல்லை என உணர வைத்தவர். ஆச்சி என்ற அடைமொழியோடு இன்றும் தமிழ்நாடு அவரின் மறைவுக்கு பிறகும் கொண்டாடி வருகிறதென்றால் சும்மாவா. அவருக்கு இன்று பிறந்தநாள்.
கோபிசாந்தாவாக தஞ்சாவூரில் பிறந்தவர். காலம் அவரை காரைக்குடியில் வளர்த்தது. படித்த படிப்பும் பாதியில் நின்று போக 12 வயதிலேயே நாடகங்களில் தலைகாட்ட ஆரம்பித்தார். அப்போதெல்லாம் காரைக்குடி பகுதியில் நாடகங்களில் பெண்கள் பின்னணி குரல் கொடுக்கவே பயன்படுத்தப்பட்டனர். கோபிசாந்தாவும் அப்படித்தான் பயன்படுத்தப்பட்டார்.
அப்படி ‘அந்தமான் கைதி’ நாடகத்தில் பின்னணி பாடியவருக்கு பாராட்டுகள் கிடைக்க அதுவே அவரை ‘யார் மகன்?’ நாடகத்தில் மேடையேற்றி அழகு பார்த்தது. அந்த நாடகம் தான் கோபிசாந்தாவை “மனோரமா”வாக பெயர் மாற்றம் செய்தது. அவரது நடிப்பின் திறமை அறிந்து நடிகர் s.s.ராஜேந்திரன் தனது நாடகக் குழுவில் சேர்த்துக் கொண்டார். பல நாடகங்களில் நடித்தார். இந்த காலத்தில் மனோரமாவிற்கு திருமணமாகி ஒரு குழந்தை இருந்தது. ஆனால் அந்த மணவாழ்வு பிரிவில் முடிந்திருந்தது. கவிஞர் கண்ணதாசனால், ‘மாலையிட்ட மங்கை’ படத்தில் அறிமுகமானார் மனோரமா. அதுவரை நாடகங்களில் ஹீரோயினாக நடித்த மனோரமா இந்த படத்தில் நடித்தது காமெடி ரோலில். காமெடி கேரக்டரில் நடித்தால் சினிமாவில் நீடித்து இருக்கலாம் என்றாராம் கண்ணதாசன். அதனை பல தருணங்களில் நினைத்து சந்தோசப்படுவாராம். இத்தகைய மனோரமாவைத்தான் 4 தலைமுறைகளாக தமிழ் சினிமா பொக்கிஷமாக பாதுகாத்தது.
நடிப்பிலே ‘பெண் சிவாஜி’ என பெயரெடுத்தவர். 1500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மனோரமா நடிக்காத கேரக்டர்களே இல்லை. 80,90 களில் மனோரமாவை விட்டால் அம்மா, குணச்சித்திர கேரக்டர்களுக்கு வேறு யாரும் இல்லை என சொல்ல வைத்தவர்.
திரையுலகம் ஆணாதிக்கம் நிறைந்தது என்ற கருத்தை அன்றே உடைத்தெறிந்தார். காமெடியின் ராணியாக உச்சம் தொட்டார்.
அவரின் தில்லானா மோகானம்பாள் ‘ஜில் ஜில் ரமாமணி’யை அவ்வளவு எளிதில் மறக்கவும் முடியாது. அதுவே அவருக்கான அடையாளமாக மாறிப்போனது என்பதை மறுக்கவும் முடியாது.
நடிகன் படத்தில் ‘பேபி அம்மா’வாக முதலில் வயதானவராக தோன்றும் அவர் பின் வயதை மேக்கப் போட்டு மறைத்து ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து அசத்தியிருப்பார். அம்மாவாக சின்னகவுண்டர், சின்னதம்பி போன்ற படங்களிலும், பாட்டியாக ‘பாட்டி சொல்லை தட்டாதே’ படத்திலும், குணச்சித்திர கேரக்டராக ‘சம்சாரம் அது மின்சாரம்’ கண்ணம்மாவாக நடிப்பில் வெளுத்து வாங்கியிருப்பார்.
தமிழ் சினிமாவில் அம்மா வேடத்தில் அதிகமாக நடித்த நடிகை என்ற சாதனையை படைத்தார் மனோரமா. சிவாஜி,எம்ஜிஆர், ரஜினி,கமல்,விஜய்,அஜித், சூர்யா, விஷால் வரை இந்த தலைமுறை நடிகர்கள் வரை நடித்த மனோரமா தமிழ் சினிமாவில் பொன்விழா கண்ட பெண் ஆளுமை. அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா,என்.டி.ராமாராவ் என ஐந்து முதலமைச்சர்களோடு நடித்த நடிகை என்ற பெருமையும் அவருக்கு உண்டு.
அனைத்து மொழி திரைப்படங்களிலும் மனோரமா நடித்துள்ளார்.
நாடகத்தில் பாடகியான படங்களிலும் பாடல்கள் பாடி சபாஷ் போட வைத்தார். ‘பொம்மலாட்டம்’ படத்தில் ‘வா வாத்தியார்’ பாடல் அவரின் புகழ் பாட வைத்தது. பாட்டி சொல்லை தட்டாதே படத்தில் ‘டில்லிக்கு ராஜான்னாலும்’ பாடல் அவரின் டிரேட் மார்க். மே மாதம் படத்தில் இடம்பெற்ற ‘மெட்ராசை சுத்திப்பார்க்க போறேன்’ பாடலின் முதல் ஹம்மிங், பின் சரணம் என இரண்டிலும் அசத்தியிருப்பார் ‘ஆச்சி’ மனோரமா.
1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக அவரின் பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. 2002ல் ‘பத்ம ஸ்ரீ ’விருது, 1989ல் புதிய பாதை படத்திற்காக ‘சிறந்த துணை நடிகை’க்கான ‘தேசிய விருது’, மலேசிய அரசின் ‘டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி’ விருது, கேரள அரசின் ‘கலாசாகர் விருது’,‘வாழ்நாள் சாதனையாளர் விருது’, தமிழக அரசின் ‘கலைமாமணி விருது’,‘எம்ஜிஆர் விருது’,‘ஜெயலலிதா விருது’,என வாங்காத விருதுகளே இல்லை
மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால் உடலும் இளமையாக இருக்கும் என்று சொல்வார் மனோரமா. அவர் இன்று உயிருடன் இல்லையென்றாலும் அவரின் நடிப்பு என்றும் இளமையாகவே இருக்கும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ‘ஆச்சி’ மனோரமா…!
Discussion about this post