ஹரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த தனியார் டிராவல்ஸ் நிறுவனம், தனது பேருந்தில் சுற்றுலா செல்ல நபர் ஒருவருக்கு 15 லட்சம் ரூபாயை கட்டணமாக நிர்ணயித்து உள்ளது. குருகிராமைச் சேர்ந்த தனியார் டிராவல்ஸ் நிறுவனம், சுதந்திர தினத்தன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டது. 15 லட்ச ரூபாய் கட்டணம் செலுத்தினால் லண்டனுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வோம் என்ற அறிவிப்பு தான் அது. இந்த அறிவிப்பை பார்ப்பவர்களுக்கு, லண்டன் சுற்றுலாப் பயணத்திற்கான சாதாரண கட்டணம் தான் இது என்று தோன்றலாம். லண்டனுக்கு இதுவரை சுற்றுலா சென்றவர்கள் விமானம் மூலமாகவோ அல்லது கப்பல் மூலமாகவோ சென்று இருப்பார்கள். ஆனால் லண்டனுக்கு பேருந்தில் சுற்றுலா அழைத்துச் செல்வோம் என்ற நிறுவனத்தின் அறிவிப்பு தான், சுற்றுலாப் பயணிகளை வியக்க வைத்துள்ளது. இது சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் இது சாத்தியம் தான் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. டெல்லியிலிருந்து வடகிழக்கு மாநிலங்கள் வழியே, மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், சீனா, கிர்கிஸ்தான் உள்ளிட்ட 16 நாடுகளைக் கடந்து லண்டன் நகரை அடைய முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. 70 நாட்கள் சுற்றுலாவிற்கான கால அளவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லண்டன் சுற்றுலாவிற்கான முதல் பேருந்து அடுத்த ஆண்டு மே மாதம் முதல் இயக்கப்படும் என தனியார் சுற்றுலா நிறுவனம் அறிவித்துள்ளது.
Discussion about this post