விழுப்புரம் அருகே திருநங்கைகள் பங்கேற்ற, மிஸ் கூவாகம் அழகிப் போட்டியில், தர்மபுரியைச் சேர்ந்த நபிசா மிஸ் கூவாகமாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக மலேசியா, தாய்லாந்து, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி, திருநங்கைகளுக்கான உலகப் புகழ்பெற்ற மிஸ் கூவாகம் போட்டியில் அறிவுசார்போட்டி, ஒய்யார நடைப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டன. இதில் தர்மபுரியைச் சேர்ந்த நபீஸா முதலிடம் பிடித்து, மிஸ் கூவாகம் 2019 ஆக தேர்வு செய்யப்பட்டார். கோவையை சேர்ந்த மடோனா இரண்டாம் இடமும், பவானியைச் சேர்ந்த ருத்ரா மூன்றாம் இடமும் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு திரைப்பட நடிகர்கள் ஆரி, ஆர்.கே. சுரேஷ், ஜெய் ஆகாஷ், நாட்டுப்புற பாடகர்கள் செந்தில் மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு பரிசுகளையும் பட்டங்களையும் வழங்கி கெளரவித்தனர்.