ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் பால் விலையை லிட்டருக்குப் பசும்பாலுக்கு 4 ரூபாயும், எருமைப்பாலுக்கு 6 ரூபாயும் உயர்த்தியுள்ளது. பால் கொள்முதல் விலை உயர்வால் பாலுற்பத்தியாளர்களின் பொருளாதார நிலை எவ்வாறு உயரும் என்பது குறித்து சில தகவல்கள்.
கறவை மாடுகள் வளர்ப்பில் ஒருவர் மட்டும் ஈடுபடுவதில்லை. ஒரு குடும்பமே மாட்டைப் பராமரிப்பதன்மூலம் தான் பாலுற்பத்தி செய்யப்படுகிறது. மாட்டைக் குளிப்பாட்டுதல், இரைபோடுதல், மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லுதல், தொழுவத்தைத் தூய்மை செய்தல், பால் கறத்தல் என நாள் முழுவதும் அவற்றைப் பராமரிப்பதால் மட்டுமே பாலுற்பத்தி செய்ய முடிகிறது. கடும் வறட்சியால் பசுந்தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், அதை ஈடுகட்ட மாட்டுத் தீவனத்துக்கு அதிகம் செலவிட வேண்டிய நிலை பாலுற்பத்தியாளர்களுக்கு உள்ளது.
இதனாலும் உயர்ந்துவரும் விலைவாசிக்கு ஏற்பத் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்வதற்காகவும் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையைப் பாலுற்பத்தியாளர் சங்கங்கள் நெடுங்காலமாகவே வலியுறுத்தி வந்தன. இதையேற்றுத் தமிழ்நாடு கூட்டுறவு பாலுற்பத்தியாளர்கள் கூட்டமைப்பான ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையைப் பசும்பாலுக்கு லிட்டருக்கு 28 ரூபாயில் இருந்து 32 ரூபாயாக அதாவது 4 ரூபாய் உயர்த்தியுள்ளது. எருமைப்பாலுக்கு லிட்டருக்கு 35 ரூபாயில் இருந்து 41 ரூபாயாக அதாவது 6 ரூபாய் உயர்த்தியுள்ளது.
தமிழ்நாடு கூட்டுறவு பாலுற்பத்தியாளர்கள் கூட்டமைப்புக்குச் சென்னை மாதவரம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் பால் பண்ணைகள் உள்ளன. இதேபோல் கோவை, தருமபுரி, ஈரோடு, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட 19 பாலுற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியங்கள் உள்ளன. இந்தப் பத்தொன்பது பாலுற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியங்களுக்கு உட்பட்ட பாலுற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 4 லட்சத்து அறுபதாயிரம் உற்பத்தியாளர்களிடம் இருந்து சராசரியாக ஒரு நாளைக்கு 33 லட்சத்து 22ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
பால் கொள்முதல் விலை பசும்பாலுக்கு லிட்டருக்கு 4 ரூபாயும், எருமைப்பாலுக்கு லிட்டருக்கு 6 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. சராசரியாக லிட்டருக்கு 5 ரூபாய் என வைத்துக் கொண்டாலும் கொள்முதல் விலையை உயர்த்துவதால் ஆவின் நிறுவனம் ஒரு நாளைக்குக் கூடுதலாக ஒருகோடியே 66 லட்ச ரூபாயை உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டியுள்ளது. மாதத்துக்கு சுமார் ஐம்பது கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளது. இந்த ஐம்பது கோடி ரூபாய் கூடுதலாக வழங்குவது விலைவாசி உயர்வுக்கு ஏற்பப் பாலுற்பத்தியாளர்களின் உழைப்புக்கு வழங்கப்படும் நியாயமான ஊதியம் எனவே கொள்ள வேண்டும்.
மொத்தம் 4 லட்சத்து அறுபதாயிரம் உறுப்பினர்களுக்குச் சராசரியாக ஒரு மாதத்துக்கு ஆயிரத்து நூறு ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும். இதனால் அவர்களின் குடும்பப் பொருளாதார நிலை சற்று உயரும். குடும்ப உறுப்பினர்களின் கல்வி, மருத்துவம், விழாக்காலச் செலவு, மாடுகளின் பராமரிப்பு ஆகியவற்றுக்கு இந்தக் கூடுதல் வருமானம் அவர்களுக்குச் சிறு உதவியாக இருக்கும் என்பதே உண்மை. தமிழக அரசின் பால்வளத்துறையும், அதன்கீழ் செயல்படும் ஆவின் நிறுவனமும் பாலுற்பத்தியாளர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளன என்பது இந்தக் கொள்முதல் விலை உயர்வின் மூலம் தெளிவாக விளங்கும்.
Discussion about this post