உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்று நடைபெறும் 15வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன.
உலக கோப்பை கிரிக்கெட்டில் சவுதம்டனில் இன்று நடைபெறும் 15வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது. டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா அணி இன்னும் தனது வெற்றிக் கணக்கை தொடங்காதது அந்நாட்டு ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது. இங்கிலாந்து, வங்காளதேசம், இந்தியா ஆகிய அணிகளிடம் வரிசையாக தோல்வியடைந்துள்ள தென்ஆப்பிரிக்கா அணி, எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை பெற முடியும் என்ற நெருக்கடியில் உள்ளது. ஒருங்கிணைந்த ஆட்டம் இல்லாமல் தடுமாறும் தென்ஆப்பிரிக்க அணி இன்றைய ஆட்டத்திலாவது எழுச்சி பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 105 ரன்னில் சுருட்டிய மேற்கிந்திய தீவுகள் அணி, அடுத்த ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் போராடி தோல்வியடைந்தது. பந்து வீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் பலமாக திகழும் மேற்கிந்திய தீவுகள் அணியை, வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா வெற்றிக் கணக்கை தொடங்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவ்விரு அணிகள் மோதும் போட்டி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது.
ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 61 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி அதில் 44ல் தென்ஆப்பிரிக்காவும், 15ல் மேற்கிந்திய தீவுகள் அணியும் வெற்றி பெற்றுள்ளன. உலக கோப்பையில் 6 முறை சந்தித்து 2ல் மேற்கிந்திய தீவுகள் அணியும், 4ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.