பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைந்தாலும், அவரது குரல் சாகாவரம் பெற்று என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் என்று அவரது ரசிகர்களும், பொதுமக்களும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
தமிழ் சினிமா உலகின் தவிர்க்க முடியாத குரலுக்குச் சொந்தக்காரரான எஸ்.பி.பாலசுப்பிரமணியன், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொரோனா தொற்று பாதிப்புக்கான சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். பாடும்நிலா பாலு மீண்டும் திரைவானில் பவனி வருவார் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தவர்களுக்கு தன் சாரீரத்தை கொடுத்துவிட்டு, சரீரத்தை பூமிக்குத் தந்துவிட்டார். இன்றுடன் அவர் உயிர்நீத்து ஓராண்டுகள் ஆகிவிட்டது. தமிழில் மட்டுமின்றி 16 இந்திய மொழிகளில் 4ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி அதன் வழியாக தேசியத் திரைப்பட விருந்துகள், நந்தி விருதுகள், பிலிம்பேர் விருதுகள் என்பவற்றோடு இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூசன் விருதுகளும் தேடிவந்து, அவரைப் பெருமைபடுத்தின.
பாடல் பாடுவதோடு, இசையமைப்பாளராகவும், பின்னணி குரல் கலைஞராகவும், நடிகராகவும் தன் திறமையை வெளிப்படுத்தியவர் எஸ்.பி.பி. அவர் மறைந்து ஓராண்டானாலும், இந்த உலகம் உள்ளமட்டும், எஸ்.பி.பி.யின் பாடல்கள் காற்றலைகளில் தவழ்ந்து, தங்கள் செவிகள் வழியாக நுழைந்து இதயத்தை வருடிக் கொண்டேதான் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
Discussion about this post