தவறான பாதையில் சென்றவர்களை நல்வழிக்கு அழைத்து செல்லும் விதமாக இன்று உலக போதை பொருள் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதுகுறித்த சிறிய தொகுப்பை காணலாம்.
தனது அன்றாட வாழ்வில் சாதாரண பிரச்னைகளை கூட சமாளிக்க முடியாதவர்கள் கையிலெடுக்கும் பழக்கம் தான் இந்த போதை பழக்கம். ஆரம்பத்தில் சாதாரணமாகவும், பொழுது போக்காகவும் தொடங்கும் பழக்கம் தான் நாளடைவில் வெறித்தனமான பழக்கமாக மாறி வாழ்வை உறிஞ்சி விடுகிறது.
அப்படிப்பட்ட இந்த கொடிய பழக்கத்தை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் அரசு சார்பிலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சார்பிலும் எடுக்கப்பட்டு வருகிறது. சிலரின் தவறான அறிமுகம் காரணமாக, போதை பழக்கம் ஏற்படுவதாக கூறுகிறார் அரசு மனநல மருத்துவமனை அலுவலர் சுமதி.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் ஏராளமானோர். அவர்களிடம் இந்த பழக்கத்தின் தீமை குறித்து விளக்கினால், அவர்கள் அதை காது கொடுத்து கேட்பதே கடினம். இந்த கொடிய பழக்கத்தில் சிக்கி அதிலிருந்து விடுபட்டவர்கள் சில பேர் மட்டுமே…. காரணம்….?
கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த காலத்தில் இதுபோன்ற பழக்கம் பெருகவில்லை. தனி குடித்தினம் என்ற ஒரு நிலை உருவானபோதே மன அழுத்தம் எனும் போதை நம்மை நிகழ்கால போதை வாழ்கைக்கு எளிதில் தள்ளி விடுகிறது. போதை பழக்கத்தை குணப்படுத்த முறையான மருத்துவம் பார்க்க வேண்டும் எனவும், அது மூளை சம்பந்தப்பட்ட ஒரு நோய் எனவும் கூறுகிறார் அரசு மருத்துவர் வெங்கடேஷ் .
போதைப் பழக்கத்திற்கு அடிமையாகும் சூழலை தவிர்த்து, தவறான பழக்கங்களுக்கு அடிமையாவதை தவிர்த்து, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க சர்வதேச போதை ஒழிப்பு தினத்தில் சபதமேற்போம்.
Discussion about this post