இளமையை பாதியளவு கூட அனுபவிக்காது, தன்னுடைய இருபத்தியெட்டு வயதிலேயே நாட்டின் விடுதலைக்காக தன் உயிரை கொடுத்த திருப்பூர் குமரன் நினைவு நாள் இன்று.
திருப்பூர் குமரன் இந்திய விடுதலைப் போராட்ட தியாகி. இவர் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் 1904 அக்டோபர் 4-ந்தேதி, நாச்சிமுத்து- கருப்பாயி தம்பதியினருக்கு முதல் மகனாகப் பிறந்தார்.
குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை ஆரம்ப பள்ளியிலேயே முடித்துக் கொண்டார். கைத்தறி நெசவுத் தொழிலை செய்து வந்த திருப்பூர் குமரன், 1923-ல் தனது 19-வது வயதில், 14 வயது ராமாயியை மணம் முடித்தார். கைத்தறி நெசவுத் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், மாற்றுத் தொழில் தேடி திருப்பூர் சென்று, ஈங்கூர் கந்தசாமி கவுண்டர் நடத்திய மில்லில் எடைபோடும் பணியில் சேர்ந்தார். காந்தி கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்ட குமரன், நாட்டு விடுதலைக்காக காந்தி அறிவித்த போராட்டங்களில் கலந்து கொண்டார்.
1932-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து, கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் உயிர் துறந்தவர் திருப்பூர் குமரன் . இதனால், கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.
Discussion about this post