தமிழ் புதுக் கவிதை உலகின் தாத்தா என்று அழைக்கப்படும் கவிவேந்தர் மு. மேத்தாவின் 76வது பிறந்த நாளான இன்று அவரின் கவியுலகத்தோடு பயணிக்கலாம்…
“கண்ணகி சிலம்பைக் கழட்டினாள், சிலப்பதிகாரம் கிடைத்தது. என் மனைவி வளையலைக் கழட்டினாள் கண்ணீர்ப் பூக்கள் கிடைத்தது” என்றார் மு.மேத்தா. கண்ணீர்ப் பூக்கள் கவிதைத் தொகுப்புதான் இலக்கிய உலகில் மேத்தாவின் கை ஓங்கி நின்றதற்கான மானசிக தொகுப்பு என்றாலும் மிகையிலும் மிகையல்ல.
1945 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாளன்று தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்தவர்தான் மு.மேத்தா. மேத்தாவின் வாழ்க்கையில் இலக்கியப் பயணம் நிரம்ப கிடைக்கபெற்றது. 1980 களில், இளையராஜாவின் இசைக்கு மு.மேத்தாவின் வரிகளில் நம்மை திகைக்க வைத்த பாடல்கள் இன்றும் தேனிசையே, தேடித் தேடி கேட்கும் இசையே…
தமிழ் கவிதை உலகத்தை ஆண்டு கொண்டிருக்கும், கவிதை உலக நாயகன் மு. மேத்தா… புதுக்கவிதையில் வகுடெடுத்த வார்த்தை அவர், வானம் பாடிகளின் மகுட நிலா. கண்ணீர்ப் பூக்கள் தொட்டு, கனவுகளின் கையெழுத்து வரை 25 கவிதை, கட்டுரை, நாவல்கள் உள்ளிட்ட நூல்களை படைத்துள்ளார். மேத்தா எழுதிய ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்ற கவிதை நூலுக்கு 2006 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.
பொன்னாடை இமையத்திற்கு போர்த்திவிடலாம் என்று மு.மேத்தா சொன்னாலும்… வானம்பாடியின் வானளாவிய கவிதைகளை எந்த ஆடையில் முடிந்து வைக்க முடியும்..?
நிலவுகளின் வெளிச்சத்தில் கவிதை பரிமாறியவர் மு. மேத்தா. கவிதைகளின் போதிமரங்களாய் தத்துவங்களை வார்த்து தந்தவர். காத்திருந்த காற்றுக்கு தனது கவிதைகளால் பதில் சென்னவர். முகத்துக்கு முகம் கவிதை பரிமாற்றம் செய்தவர். ஒற்றைத் தீக்குச்சியால் புதுக் கவிஞர்களுக்கு சுடர் விட்டவர். மனிதனைத் தேடி கவிதைகளில் கண்டுபிடிக்க முயன்றவர். மனச்சிறகால் நம்மை கொள்ளையடித்துக் கொண்டிருப்பவர் மு. மேத்தா…
இலக்கிய கடலில் மேத்தா ஒரு துளி, அந்த ஒரு துளிக்குள் நிறைந்திருக்கும் கடல் மு. மேத்தாவின் கவிதைகள். ஈரவிழிக் காவியங்கள் எழுதி வெளியிட்டவன், எழுதி வெளிட்டதினால் நம் இதயங்களை தொட்ட மு. மேத்தா, நூற்றாண்டுகள் கடந்து வாழ நியூஸ் ஜெ வாழ்த்துகிறது…
நியூஸ் ஜெ செய்திகளுக்காக செய்திக்குழுவுடன் சாக்லா…
Discussion about this post