இந்தியாவிற்குள் வியாபார நோக்கில் நுழைந்து நம்மையே ஆளநினைத்த ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த தமிழக வீரர்களில் முக்கியமானவர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவரது 260-வது பிறந்தநாளான இன்று அவரை குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்
தமிழ்நாட்டின் தற்போதைய ஒட்டப்பிடாரம் 200 ஆண்டுகளுக்கு முன்னர் பாஞ்சாலக்குறிச்சி என அழைக்கப்பட்டது. அதனை கெட்டிபொம்மு என்ற தெலுங்கு பேசும் ஜெகவீரபாண்டியன் என்பவர் பாளையக்காரராக ஆட்சி செய்து வந்தார். அவருக்கு 1760-ல் பிறந்தவர் தான் பின்னாளில் வீரபாண்டிய கட்டபொம்மன் என அழைக்கப்பட்டார்.
1790-ல் பாளையக்காரராக வீரபாண்டிய கட்டபொம்மன் பொறுப்பேற்ற போது இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியினர் வரிவசூலிக்கும் நிலையில் இருந்தனர். அவ்வாறு பாஞ்சாலக்குறிச்சி பாளையத்திற்கும் வரிவசூல் செய்ய முயன்றபோது அதனை செலுத்த மறுத்தார் வீரபாண்டிய கட்டபொம்மன்.
இதுதொடர்பாக 1797-ல் கிழக்கிந்திய கம்பெனியின் ஆலன் என்பவருடன் ஏற்பட்ட போரில் வெற்றி பெற்றார் கட்டபொம்மன். பின்னர் பேச்சுவார்த்தைக்கு வந்த ஜாக்சன் துரை, கட்டபொம்மனை கைது செய்ய முயன்றபோது சாதுர்யமாக தப்பித்தார் கட்டபொம்மன்.
கட்டபொம்மனை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற முனைப்புடன் பெரும்படையுடன் 1799-ல் பானர்மேன் என்ற ஆங்கிலேய தளபதி தலைமையில் போர் நடைபெற்றது. தீரத்துடன் போரிட்ட கட்டபொம்மன், ஒருகட்டத்தில் பாஞ்சாலக்குறிச்சி கோட்டையில் இருந்து தப்பித்தார். ஆனால், புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானின் சூழ்ச்சியால் கட்டபொம்மன் கைது செய்யப்பட்டார். 1799-ம் ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி கயத்தாறு கோட்டையில் உள்ள புளிய மரத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்.
ஆங்கிலேய ஆட்சியின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடிய சுதந்திர போராட்ட வீரர்களில் முக்கியமானவரான, வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தையும், தியாகத்தையும் யாராலும் மறக்க முடியாது.
Discussion about this post