வாழ்நாள் முழுவதும் கம்பராமாயணத்தில் தோய்ந்து வாழ்ந்தவரும், பெரும்புலமை படைத்த அறிஞருமான நீதிபதி மு.மு.இஸ்மாயில் பிறந்த தினம் இன்று. அவரைப் பற்றி பேசுகிறது இந்த செய்தித் தொகுப்பு.
கம்பராமாயணம் என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது, நீதிபதி மு.மு. இஸ்மாயில். 1921 ஆம் ஆண்டு நாகூரில் பிறந்த அவர், தமிழைத் தனது புலமைத் திறத்தால் வளப்படுத்தியவர்களில் குறிப்பிடத்தகுந்தவர். இளம் வயதிலேயே தமிழறிவுக்கான அஸ்திவாரத்தை ஆழமாக பெற்றிருந்த இஸ்மாயில், பழந்தமிழ் இலக்கியங்களைத் தம் சொந்த ஆர்வத்தால் நிறையப் படித்துத் தேர்ந்தார்.
காந்தியின் மீதும், அவரின் சிந்தனைகள் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த மு.மு.இஸ்மாயில், காந்தியின் “ஹரிஜன்’ இதழ்களின், அனைத்து தொகுப்புகளையும், தம் வாழ்நாளின் இறுதிவரை பாதுகாத்து வந்தார்.
இஸ்மாயிலின் கம்பராமாயணச் சொற்பொழிவைக் கேட்ட தமிழ் அன்பர்கள், ஆய்வுச்சுவை தோய்ந்த அந்த இனிய தமிழில் சொக்கிக் கிறங்கினார்கள். இதனால் அவர், பல இடங்களில் மீண்டும் மீண்டும் கம்பன் குறித்துப்பேச அழைக்கப்பட்டார். சொற்பொழிவாளராக இருந்த இஸ்மாயில், புகழ்பெற்ற பல பத்திரிகைகளின் சிறப்பிதழ்களில், கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். அவர் எழுதிய முதல் புத்தகமான, “மௌலானா அபுல்கலாம் ஆசாத்’ பற்றிய நூலுக்கு மூதறிஞர் ராஜாஜி, முன்னுரை தந்து பெருமைப்படுத்தினார்.
கம்பன் கண்ட ராமன், கம்பன் கண்ட சமரசம், செவிநுகர் கனிகள், பழைய மன்றாடி – என அடுத்தடுத்து, இஸ்மாயிலின் பழந்தமிழ் ஆய்வு நூல்கள் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றன. அவரின் மிகப்பெரிய சாதனையாக கம்பராமாயண மூல நூலை, முழுமையான கையடக்க ஆராய்ச்சிப் பதிப்பாக கொண்டு வந்ததை உதாரணமாக காட்டலாம்.
சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியாக விளங்கிய பெருமைக்குரிய இஸ்மாயில். தமிழகத்தின் தாற்காலிக ஆளுநராகவும் சிறிதுகாலம் பணியாற்றியிருக்கிறார். தமிழின் பக்தி இலக்கியம், மதங்கடந்து தமிழர்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்கும் ஆற்றல் பெற்றது என்பதற்கு இஸ்மாயிலின் கம்பராமாயணப் புலமை ஓர் எடுத்துக்காட்டு.
Discussion about this post