ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17 ஆம் தேதி உலக வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
1987 ஆம் ஆண்டு, பிரான்சின் பாரிஸ் நகரில்தான், முதன் முதலாக வறுமை ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அதன் பிறகு உலக ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், பசிக்கொடுமையிலிருந்து மக்களை விடுவிப்பதற்காகவும், ஐக்கிய நாடுகள் சபை, 1992-ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதியை வறுமை ஒழிப்பு நாளாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஒரு நாட்டின் அல்லது இடத்தின் அடிப்படை வாழ்க்கைத் தரத்துக்குக் கீழ் வாழும் மக்களை, ஏழ்மை நிலையில் அல்லது வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள் எனலாம். பொதுவாக ஒரு குறிப்பிட்ட அளவு வருமானத்தை வைத்தே ஏழ்மை நிலை அளவு மதிப்பிடப்படுகின்றது. முன்பெல்லாம் உண்ண உணவின்றி, பசி, பட்டினியால் வாடுவதுதான் வறுமை எனப்பட்டது. தற்போதைய நவீன யுகத்தில், வளர்ச்சியின் பரிமாணங்களில் மாற்றங்கள் ஏற்பட்டதால், வறுமை பற்றிய புரிதலும் மாறியுள்ளது. எனவே, பசியின்மையை மட்டும் வைத்து வறுமையை அளவிட முடியாது. உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், போதிய சுகாதார வசதிகள், ஊட்டச்சத்துகள், வருமானம், கல்வி போன்ற தனிமனிதனின் வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்த நிலை தான் வறுமை எனப்படுகிறது.
உலக மக்கள் தொகையில் பாதி பேரின் ஒரு நாள் வருமானம் 150 ரூபாய்க்கும் கீழ் உள்ளது. அதேபோல், 14 சதவீதம் பேரின் ஒரு நாள் வருமானம் 75 ரூபாய்க்கும் குறைவாக உள்ளது. இவர்களால் எப்படிக் குறைந்தபட்சத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும். எனவேதான், உலகில் நிகழும் மரணங்களில் அதிகம் வறுமையால் ஏற்படுகிறது. உலகில் சுமார் 87 கோடிப் பேர் போதிய உணவின்றியும் 100 கோடிப் பேர் சுத்தமான குடிநீரின்றியும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய புள்ளி விபரங்களின் படி உலகில் ஏறத்தாழ 170 கோடிப் பேர் வறுமையிலிருப்பதாகவும், அதில் பாதி பேர் தெற்காசியாவிலும், நான்கில் ஒரு பங்கினர் ஆப்பிரிக்காவிலும் இருப்பதாக ஐ.நா. சபை தெரிவிக்கின்றது.
தெற்காசியாவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரம் இருந்தாலும், உலக வங்கியின் அறிக்கைப் படி, இந்தியாவின் கிராமப்புறங்களில், வறுமையின் அளவு 25 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 14 சதவீதமாகவும் உள்ளது. ஒட்டு மொத்தமாக 22 சதவீத மக்கள் இந்தியாவில் இன்றும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்ந்து வருகின்றனர். இந்நாளில், நாமும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்.
Discussion about this post