நம் வாழ்க்கையில் எத்தனை உறவுகள் வந்தாலும், உண்மையான ஓர் உறவு என்றால் அது நம் பெற்றோர். ஆனால் காலத்தின் சுழற்சியில் அவர்களை நாம் மறந்துவிடுகிறோம். அவர்களை நினைவுகூறும் விதமாக, இன்று அனைத்துலக முதியோர் தினமாக கொண்டாடப்படுகிறது.
சின்னஞ்சிறு செடியாக தோன்றி, கடினப்பட்டு வளர்ந்து, காய்கனிகளை தந்த மரம் , இன்று இலை உதிர்ந்து தவிக்குது..!!
விதைத்தவரையும், வளர்த்தவரையும் நட்டாத்தில் தவிக்க விடுவது நியாயமோ… என இவர்களின் பிள்ளைகளைப் பார்த்து கேட்கத் தோன்றுகிறது…
இன்றைய காலகட்டத்தில், எண்ணற்றோர் தங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விடும் அவலம் அறங்கேறி வருகிறது. பிள்ளைகளுக்காக உழைத்து …பிள்ளைகள் நலனுக்காகவே வாழும் உயிர் பெற்றோர்கள். ஆயிரம் உறவுகள் இருப்பினும் உண்மையான ஒரு உறவு என்றால் அது பெற்றோர் மட்டும்தான்.
நிலாவைக் காட்டி சோறு ஊட்டிய பெற்றோர், இன்று தெருவீதியில் உறவுகளற்று நிற்கும் வேளையிலும்…. சொந்த முயற்சியில் உழைத்து சாப்பிட வேண்டும் என தங்களால் இயன்ற வேலைகளை செய்து வருகிறார்கள்.
ஒருசிலர் பெற்றோரை முதியோர் இல்லத்திலாவது சேர்த்துவிடும் நிலையில், வேறு சிலரோ, வீதியில் விட்டுவிடுகிறார்கள்.. ஆனால் அவற்றை பெரிதாக எண்ணாமல், அதையும் ஒரு சவாலாக எடுத்து வாழ்ந்து வருகிறார்கள் இவர்கள்…
உதவி என்று எவரிடமும் போய் நிற்காமல், சிறுக சிறுக சேர்த்த பணத்தை வைத்து, சாலையோரங்களில் செருப்பு தைப்பது, பூ விற்பது, இட்லி தோசை செய்து விற்பது போன்ற வேலைகளில் ஈடுபடுகிறார்கள்… சிறிய பெட்டிக்கடை போல வைத்துக்கொள்வது, கடற்கரையில் ஜோதிடம் பார்ப்பது, குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை விற்பதையும் பார்க்க முடிகிறது…
தனித்து விடப்பட்ட நிலையிலும் தற்போது எங்களுக்கு உதவியாக இருப்பது , தமிழக அரசு வழங்கி வரும் முதியோர் உதவித்தொகையே என்கிறார் சரோஜா…
தெருவில் விடப்பட்டதை கூட எண்ணி வருந்தாமல், பேரக்குழந்தைகளை பார்க்க முடியவில்லையே என எண்ணி வருந்தும் தாயுள்ளங்கள் தான் அதிகம்…
முதுமை என்பதும் இனிமைதான் ….தனிமை காணாத வரையில்…. இளைமைகால நிகழ்வுகளை கனவாக காணும் போது … நட்பு வட்டத்தில் திளைத்து மூழ்கிய நாட்களை மறக்க முடியுமா…. பிள்ளைகளுடன் உறவாடிய காலத்தைதான் மறக்க முடியுமா… முதுமையும் இனிமைதான் உறவுகளால் தனித்து விடாமல் இருந்தால். அனைத்துலக முதியோர் தினமான இந்நாளில் சற்று முதியோர்களை பற்றி நினைவு கூறுவோம்.
Discussion about this post