தமிழகத்தில் மக்களை வாட்டி வதைத்த கத்திரி வெயில் இன்றுடன் முடிவடைவதால் சற்றே நிம்மதி ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு கடுமையான வெப்பம் மக்களை வாட்டி வதைத்தது. பல்வேறு நகரங்களில் தினமும் 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை பதிவானது. அதே நேரம் கோடையில் உருவான பானி புயல் கடல் வழியாக பயணித்து ஒடிசாவில் கரையை கடந்ததால் தமிழகத்திற்கு புயல் ஆபத்து ஏற்படவில்லை. இந்த நிலையில் கடந்த 4 ம் தேதி தொடங்கிய கத்திரி வெயில் மக்களை வீட்டிற்குள் முடக்கியது. இருந்த போதும் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெயிலோடு அவ்வப்போது மழையும் பெய்ததால் மக்கள் சற்றே நிம்மதி அடைந்தனர். ஆனால் சென்னையில் ஒரு துளி மழை கூட பெய்யாததால் சென்னைவாசிகள் ரொம்பவே ஏமாற்றத்திற்குள்ளானார்கள்.
இந்த நிலையில் கத்திரி வெயில் இன்றுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் மாவட்டங்களில் அனல் காற்று வீசும் எனவும் 6 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post