பூந்தமல்லி அருகே போலீஸ்காரரிடம் செல்போன் பறித்த மாணவர்கள் உள்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னையை அடுத்த ஆவடியைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் திருவல்லிக்கேணி
காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிந்து வருகிறார்.
நேற்றிரவு பணி முடித்து விட்டு பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம் வழியாக ஆவடியை நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். சென்னீர்குப்பம் பைபாஸ் சாலை அருகே சென்ற போது செல்போனில் அழைப்பு வரவே, பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் மறைந்திருந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் சிலம்பரசனிடம் செல்போனை பறிக்க முயன்றனர். அவர் தர மறுத்துள்ளார். இதையடுத்து 3 பேரும் சேர்ந்து அவரை தாக்கி விட்டு செல்போனை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர்.
இதையடுத்து சிலம்பரசன் பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அந்தப் பகுதியில் ரோந்து வாகனத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் செல்போன் பறித்துச் சென்றவர்களை வலை வீசி தேடியபோது, அவர்கள் அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு லாரியின் பின்பக்கம் பதுங்கி இருப்பதை போலீசார் கண்டு பிடித்தனர். பின்னர் 3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில்
மூவரும் ஆவடியை அடுத்த அயப்பாக்கத்தைச் சேர்ந்த 17 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிய வந்தது. இவர்களில் ஒருவன் 10-ம் வகுப்பும், மற்றொருவன் பாலிடெக்னிக் படித்து வரும் மாணவர்கள் என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், இவர்கள் இதே போல வேறு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்களா என்று விசாரித்து வருகின்றனர்.
Discussion about this post