திருப்பூரில் பனியன் தொழிலாளியின் மகன் ஒருவர், குறைந்த செலவிலான டிஜிட்டல் அலாரம் லாக்கர் பாதுகாப்பு கருவியை கண்டுபிடித்துள்ளார்.
திருப்பூர் போயம்பாளையம் பகுதியை சேர்ந்த பனியன் தொழிலாளி குமாரசாமியின் மகன் ஹரிஷ்குமார். தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம் இறுதியாண்டு படித்து வரும் இவர், டிஜிட்டல் அலாரம் லாக்கர் பாதுகாப்பு கருவியை கண்டுபிடித்துள்ளார். இவர் கண்டு பிடித்த கருவியை பீரோவில் பொருத்திவிட்டால், பீரோவை யார் திறந்தாலும் உடனடியாக செல்போனுக்கு அழைப்பு வரும் வகையில் அதனை வடிவமைத்துள்ளார்.
இந்த பாதுகாப்பு கருவியை, சாவி போட்டு திறக்கும் எந்தவொரு கதவு, பீரோ, லாக்கர்களிலும் பொருத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
போலி சாவி, ஹேர்பின் அல்லது எந்தவொரு ஆயுதத்தை கொண்டு திறக்க முயற்சி செய்தாலும் நமக்கு அழைப்பு வந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தையில் இது போன்ற கருவிகள் கிடைத்தாலும், அவற்றின் விலை மிகவும் அதிகம் என்று கூறும் ஹரீஷ்குமார், சுமார் 2 ஆயிரம் ரூபாய்க்குள் இந்த கருவியை கண்டுபிடித்துள்ளார்.
சிறுவயதிலேயே அறிவியலில் ஆர்வம் கொண்ட ஹரீஷ் குமாருக்கு, அவரது பெற்றோரும் ஆசிரியர்களும் ஊக்கமளித்து வருகின்றனர். தனது கண்டுபிடிப்புகள் சாமானியர்களுக்கு பயனளிக்க வேண்டும் என கூறும் ஹரீஷ் குமார், தமிழக அரசின் உதவியையும் எதிர்பார்த்துள்ளார்.
Discussion about this post