திருப்பூரில் சாலை விதிகளை பின்பற்றாமலும் தலைக்கவசம் அணியாமலும் வேகமாக சென்ற இளைஞரை தடுத்து நிறுத்திய போக்குவரத்து போலீசாரின் சட்டை கிழிய போதை ஆசாமி ஒருவர் அடிக்கக்கூடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. திருப்பூர் சிக்னலில் அதிவேகமாக சென்ற இளைஞர் ஒருவரை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். போதையில் இருந்த அவரிடம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் சுந்தரமூர்த்தி மற்றும் போக்குவரத்து காவலர் பொன்னாங்கன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் திருச்சியை சேர்ந்தவர் என்பதும் அவரது பெயர் முரளி என்றும் திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போதை சோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல போக்குவரத்து காவலர் பொன்னாங்கன் முற்பட்டார். ஆனால் பொன்னாங்கனை அந்த போதை ஆசாமி தாக்கத் தொடங்கினார். அவரை தடுக்க காவலர்கள் முயன்ற நிலையில், போக்குவரத்து காவலரின் சீருடையை கிழித்தும் எட்டி உதைத்தும் அவர் மோசமாக நடந்து கொண்டார்.
இதையடுத்து அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தை அங்கிருந்தோர் தங்களது மொபைல் போனில் பதிவு செய்த நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Discussion about this post