blue whale விளையாட்டை தடை செய்ததைப் போல், தமிழ் கலாச்சாரத்தை சீரழித்து வரும் டிக் டாக்கை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இளைய தலைமுறையை சீரழித்து வரும் டிக் டாக் செயலி பற்றிய செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.
கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சீனாவில் இருந்து அறிமுகம் செய்யப்பட்ட டிக் டாக் ஆப், 2018 ஆம் ஆண்டு அடுத்த வெர்சனை வெளியிட்டது. குறுகிய காலத்திலேயே டுவிட்டர், ஸ்னாப்சாட் டை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது டிக் டாக். எந்த இடத்தில் இருந்தும், எளிதாக ஒரு வீடியோவை உருவாக்கி, அதனை நொடிப் பொழுதில் எடிட் செய்து பல்லாயிரம் பேருக்கு, பகிரும் வகையில், உருவாக்கப்பட்டுள்ளது டிக் டாக் . உலகம் முழுவதும் சுமார் 500 மில்லியன் பேர் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் 13 முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்கள் என்கிறது பிரிட்டனின் எக்ஸ்பிரஸ் இணைதளம்.
அதிக பார்வையாளர்கள் மற்றும் லைக்களை பெற வேண்டும் என்ற ஒரே நோக்கில் சில பெண்கள், அரைகுறை ஆடையுடன், ஆபாச திரைப்பட வசனங்களை பேசி, வெளியிடும் வீடியோக்கள், முகம் சுளிக்க வைக்கின்றன. எனினும் இந்த வீடியோக்கள், அதிக லைக் பெறுவதோடு, பகிரப்படுவதால், தொடர்ந்து இதுபோன்ற வீடியோக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
டிக் டாக் மோகத்தில் இளைஞர் ஒருவர் கழுத்தை அறுப்பது போல், பாவனை செய்ய முயன்று, உண்மையாகவே கழுத்தை அறுத்துக் கொண்ட, விபரீதமும் நிகழ்ந்தது.
பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரை, வடிவேலு காமெடியை வைத்து கிண்டல் செய்தது, காவல்நிலையத்தை வீடியோ தயாரிக்க பயன்படுத்தி கைதானது என டிக் டாக் இளைஞர்களின் அத்துமீறல்களுக்கு அளவில்லாமல் உள்ளது. சாதி, மத மோதல்களை தூண்டுவதற்கும் டிக் டாக் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆப்பை அதிகளவில் சிறுவர்கள் பயன்படுத்தும் நிலையில், அதற்கான கட்டுப்பாடுகள் இல்லாததால், டிக் டாக் செயலிக்கு கேள்வி எழுப்பி பிரிட்டன் அரசு கடிதம் எழுதியது. டிக் டாக்கின் பதில் திருப்தியாக இல்லாவிட்டால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரிட்டன் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டே, டிக்டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.