பொழுதுபோக்கு செயலியாக அறிமுகமான டிக்டாக்கில் வெளிவரும் வீடியோக்கள் ஆபாசமானதாகவும், அதே சமயத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களை அவமதிக்கும் விதத்தில் இருப்பதாகவும் எழுந்த புகாரை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் அதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. ஆனால் இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்த டிக்டாக் நிறுவனத்திற்கு சில நிபந்தனைகளுடன் அந்த தடையானது நீக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த வாரத்தில் மீண்டும் பிளே ஸ்டோர்களில் டிக் டாக் செயலி இடம் பிடித்தது.
ஆனால் இந்தமுறை யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு கூகுள் பிளே ஸ்டோரில் மீண்டும் வந்த ஒரே வாரத்தில் ஆப்களில் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளது. இதனை அந்த நிறுவனமே #ReturnOfTikTok என்று ஒரு ஹேஸ்டேக்கையே சத்தமில்லாமல் ட்ரெண்டாக்கி வருகிறது.
தற்போது உள்ள நிலைமையில் இந்தியாவில் அதிக பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 30-ம் தேதி 90-வது இடத்தில் இருந்த டிக்டாக், மறுநாளில் அதாவது மே 1ல் டாப் இடத்திற்கு வந்தது. இதற்கு டிக் டாக் நிறுவனம் கொடுத்த ஒரே ஒரு அறிவிப்பு தான் முக்கிய காரணம். அப்படியென்ன அறிவிப்பு என்கிறீர்களா?
மே 1 முதல் மே 16 வரை தினமும் மூன்று பயன்பாட்டாளர்களுக்கு டிக்டாக் நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்று அறிவித்தது. இதன்மூலம் யார் ஒரு லட்சம் வெல்கிறார்களோ இல்லையோ, டிக்டாக் நிறுவனம் வியாபார உலகில் தான் விட்ட இடத்தை மீண்டும் வென்று விட்டது என்பதில் சந்தேகம் இல்லை.
தற்போதைய நிலவரப்படி உலகம் முழுக்க 50 கோடி பார்வையாளர்கள் டிக்டாக் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளதாக பெருமையாக சொல்கிறது டிக்டாக் நிறுவனம்.