ஜூன் 1 ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை 8 மணிக்கு தொடங்குமென தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க நான்காவது கட்ட ஊரடங்கு நிறைவுபெறும் ஜூன் 1 ஆம் தேதி முதல் 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமென ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்துள்ளார். இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவை இணையதளம் மட்டுமின்றி குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் உள்ள கவுன்டர்களிலும் மேற்கொள்ளலாம் என அவர் தெரிவித்திருந்தார். இதன்படி, சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு சென்னை புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இன்று காலை 8 மணிக்கு தொடங்குமென தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதேபோல், திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு, மங்களூர் ஆகிய முன்பதிவு மையங்களில் மட்டும் குறைந்தபட்சம் 2 கவுன்டர்கள் செயல்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் முன்பதிவு மட்டுமே செய்யமுடியும் என்றும் மறுஅறிவிப்பு வரும்வரை ரத்துசெய்யப்பட்ட ரயில் டிக்கெட் கட்டணத்தை திரும்ப வழங்க இயலாது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், முன்பதிவு செய்ய கவுன்டர்களுக்கு வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டுமென தெற்கு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Discussion about this post