சென்னை வியாசர்பாடியில், கைது செய்ய தயாராக இருந்த போலீசாரை தாக்கிவிட்டு, காவல்நிலையத்தில் இருந்து மூன்று ரவுடிகள் தப்பியோடியுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது… தப்பிய ரவுடிகளின் பின்னணி என்ன? அவர்கள் தப்பித்தது எப்படி என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு…
சென்னை வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு, விசாரணைக்காகவும், பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கவும், அஜீத், அஜய், ஜெகதீஷ்வரன் ஆகிய மூன்று ரவுடிகள், கடந்த 30-ம் தேதி போலீசாரால் வரவழைக்கப்பட்டனர். வந்த மூன்று ரவுடிகளையும் போலீசார் கைது செய்யவும் திட்டமிட்டிருந்தனர். இதனை எப்படியோ அறிந்துகொண்ட மூன்று ரவுடிகளும், காவலுக்காக இருந்த உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பியுள்ளனர்.
தப்பியோடிய ரவுடிகள் யார்? இவர்கள் காவல்துறையினரிடமிருந்து தப்பிப்பது இது முதல் முறையல்ல, ரவுடிகளின் பின்ணனியை சற்று புரட்டி பார்ப்போம். தப்பி ஓடியதில் ரவுடி அஜீத் என்ற இட்டா அஜீத் மீது, கொலை, கொள்ளை என சுமார் 25 வழக்குகள் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறுவனாக இருக்கும்போது கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி அஜீத், அப்போதே சிறையில் இருந்து வார்டன்களை தாக்கி விட்டு தப்பியுள்ளார்.
காவல்துறையினர் கைது செய்ய வந்தால், அவர்ளை தாக்குவது, கடிப்பது போன்ற செல்களில் ஈடுபட்டு தப்பிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் ரவுடி அஜீத் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதே போல், மற்றொரு ரவுடியான அஜய், ரயிலில் படியோரம் பயணிப்பவர்களின் செல்போன்களை பறிப்பது, வீடு புகுந்து கொள்ளையடிப்பது போன்ற பல குற்றச்சம்பவங்களில் ஈடுப்பட்டுள்ளார். இதே போன்று மூன்றாவது ரவுடியான ஜெகதீஸ்வரன் மீது 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் தான், மூவரையும் கைது செய்ய காவல்நிலையம் வரவழைத்தபோது, 3 ரவுடிகளும் திட்டமிட்டு ஒருவரைவொருவர் தாக்கி கொண்டு, அருகில் இருந்த கண்ணாடியை உடைத்து, பிடிக்க முயன்றால் குத்திவிடுவதாகவும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்வோம் எனவும் மிரட்டி, அங்கிருந்து தப்பியுள்ளனர். இதையடுத்து, புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தப்பியோடிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். சினிமா பாணியில், காவல் நிலையத்தில் இருந்து தப்பிச் செல்ல திட்டமிட்டு, காவலர்களை ரவுடிகள் தாக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post