கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினத்தில் 1944-ம் ஆண்டு செப்.26-ம் தேதி பிறந்த மீரான், மலையாளத்தில் பி.ஏ படிப்பை முடித்தவர். தொடக்கத்தில் மலையாளத்தில் எழுதினார். பின்னர், தான் கேட்ட, பேசிய தமிழ் மொழியை முதலீடாகக் கொண்டு, எழுத ஆரம்பித்தார். அது பின்னாளில் அவருக்கான தனித்துவமிக்க மொழிநடையாக உருப்பெற்றது.
துறைமுகம், கூனன் தோப்பு, சாய்வு நாற்காலி, அஞ்சுவண்ணன் தெரு, குடியேற்றம், உள்ளிட்ட நாவல்களையும், அன்புக்கு முதுமை இல்லை. தங்கரசு, அனந்தசயனம் காலனி, ஒரு குட்டித்தீவின் வரைபடம், தோப்பில் முகமது மீரான் கதைகள், ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் உள்ளிட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இதில் சாய்வு நாற்காலி நூலுக்காக அவருக்கு சாகித்ய அகடாமி விருது வழங்கப்பட்டது.
இஸ்லாம் மீது மதிப்பு கொண்ட மீரான், தான் சார்ந்த முஸ்லீம் சமூக மக்களை விமர்சனங்களோடு அணுகினார். அதற்காக தொடக்கத்தில் எதிர்ப்புகளையும் எதிர்கொண்டார். `எனக்கு கடவுள் பக்தி உண்டு; நானும் 5 வேளை தொழுவேன்; ஆனால் இஸ்லாம் நிறுவனமாவதை ஏத்துக்கமாட்டேன்’ என்று அழுத்தமாக கூறியவர்.
60களில் இருந்து எழுத தொடங்கிய மீரானின் கதைகளை வெளியிட எந்த பதிப்பகங்களும் முன்வரவில்லை. பல்வேறு சவால்களை கடந்து எழுத்துலகில் பயணிக்க ஆரம்பித்த அவருக்கு, காலம் சரியான அங்கீகாரத்தை வழங்கியது.
வட்டாரமொழியைக்கொண்டு, தான் சார்ந்த மண்ணின் கதைகளை குறுக்கு வெட்டுத்தோற்றத்துடன் பதிவு செய்தவர். அவரிடம் சொல்வதற்கு ஏராளமான கதைகளிருந்தன. ஆனால் காலம் தான் அதை எழுதவதற்கான அவகாசத்தை கொடுக்கவில்லை. ஆம்! 2019 -ம் ஆண்டு மே-10ஆம் தேதி பூவுலகைவிட்டு மறைந்தார் மீரான்.
இன்றும் அஞ்சுவண்ணன் தெருவில் ஏதோ ஒரு இடத்தில் அமர்ந்துகொண்டு கதைகளை சொல்லிக்கொண்டேயிருக்கிறார், எழுத்தை மூச்சாகக் கொண்ட தோப்பில் முகமது மீரான்!
Discussion about this post