தூத்துக்குடி – பள்ளியின் கழிவறையை மாணவர்களைச் சுத்தம் செய்யச் சொன்ன தலைமை ஆசிரியர்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியின் அருகே உள்ளது கிளவிப்பட்டி என்கிற கிராமம். அக்கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் லீலா ஜோதிலட்சுமி என்பவர், பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களை பள்ளியின் கழிவறை மற்றும் பள்ளி வளாகத்தையையும் சுத்தம் செய்யுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவ மாணவியர்கள் தலைமை ஆசிரியரை எதிர்த்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி ஒருவர் செய்தியாளர்களுக்கு தெரிவித்தத் தகவலின் படி, ‘ தலைமை ஆசிரியர் கழிவறையைச் சுத்தம் செய்யச் சொல்கிறார், அவர் கழிவறைக்கு செல்வதற்கு எங்களை தண்ணீர் கொண்டுவரச் சொல்கிறார், அவரின் பேச்சைக் கேட்கவில்லை என்றால் தாகாத வார்த்தைகளைக் கொண்டு திட்டுகிறார்’ என்று கூறினார். மேலும் அந்த மாணவி கூறியதாவது, ’பள்ளி வளாகத்தைச் சுத்தம் செய்ய சொல்வதோடு மட்டுமல்லாமல் மரக் கன்றுகளை நடுவதற்கு பள்ளியிலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து மண்ணை அள்ளிவரச் சொல்கிறார் என்று தெரிவித்தார்.

மாணவ, மாணவியர்களின் போராட்டத்தை அறிந்துகொண்ட மாவட்ட கல்வி அலுவலர், தாசில்தார் மற்றும் காவல்துறையினர் கிளவிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கே குழுமியிருந்த மாணவர்களிடமும் பள்ளி ஆசிரியர்களிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். இதன் காரணமாக சலசலப்புகள் கட்டுக்குள் வந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவியர்களும் சுமூகமாக கலைந்து சென்றார்கள். தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல் என்று பாடம் நடத்த வேண்டிய ஆசிரியரே இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவது கொடுமையானது.

Exit mobile version