கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நலன்கருதி வழக்கமாக உற்பத்தி செய்யப்படும் தென்னைக்கன்றுகளை விட இரண்டு மடங்கு தென்னைக் கன்றுகள் இந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட உள்ளதாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த தென்னை மரத்திற்கும், அதனை வெட்டி அகற்றுவதற்கும், புதிய கன்றுகள் நடுவதற்கும் நிதியுதவி செய்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சேதமடைந்த தென்னை மரங்களின் கணக்கெடும் பணி 70 சதவிகிதம் நிறைவடைந்திருப்பதாகவும் ஒரு வாரத்திற்குள்ளாக கணக்கீட்டு பணி நிறைவடையும் என வேளாண்மைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தென்னை மரங்கள் சேதம் அதிகம் என்பதால் அதனை மீண்டும் நிறுவும் முயற்சியில் வழக்கமாக ஆண்டுக்கு உற்பத்தி செய்யும் 9 லட்சம் தென்னை கன்றுகளை இரண்டு மடங்காக 18 லட்சமாக உயர்த்தவும் வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வேளாண்மைத் துறை உயர் அதிகாரிகளால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தென்னைகளுக்கிடையே ஊடுபயிர்களாக உளுந்து, கடலை உள்ளிட்ட பயிர்களை பயிரிடும் வகையில் விவசாயிகளுக்கு மானியவிலையில் விதைகள் வழங்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது தென்னை வளர்ச்சி வாரியம், வேளாண்மை பல்கலைக்கழகம், தமிழகத்தில் உள்ள 22 இடங்களில் தென்னைக் கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக தேவைப்படும் பட்சத்தில் அண்டை மாநிலங்களில் இருந்து தென்னைக் கன்றுகளை வாங்கவும் வேளாண்மைத்துறை முடிவு செய்துள்ளது
Discussion about this post