இலக்கிய உலகில் பெரும் புலவராக, சமய உலகில் சான்றோராக, அரசியல் உலகில் தலைவராக ,பத்திரிகை உலகில் வழிகாட்டியாக ,தொழிலாளர் உலகில் தனியரசராகக் கோலோச்சிய திரு.வி.க.
தமிழ்த் தென்றல் என்றும், தமிழ்நாட்டுக் காந்தி என்றும் போற்றப்பட்ட திரு.வி.க. வின் வரலாற்றுப் பயணத்தை சற்றே திரும்பிப் பார்ப்போம்…
இருபதாம் நுாற்றாண்டின் தமிழ்க் கவிதை வளர்ச்சிக்குப் பாரதியார் ஆணிவேராய் விளங்கியது போல், உரைநடை வளர்ச்சிக்குத் ஆணிவேராகத் திகழ்ந்தவர் திரு.வி.க. என்ற திருவாரூர் விருத்தாசலனாரின் மகன் கல்யாணசுந்தரம்.
காஞ்சிபுரம் மாவட்டம் துள்ளம் என்ற சிற்றூரில் 1883 இல் பிறந்தார். இவரின் தந்தை ஒரு ஆசிரியர், வணிகர். இசை, இலக்கியப் பயிற்சி பெற்றவர். அவரிடமே கல்வியைத் தொடங்கிய திரு.வி.க., தமிழ் அறிஞர் யாழ்ப்பாணம் நா.கதிரவேற் பிள்ளையிடம் புராணங்கள், யாப்பிலக்கணம் கற்றுத் தேர்ந்தார்.
‘தேச பக்தன்’ பத்திரிகையின் ஆசிரியராக இரண்டரை ஆண்டுகள் இருந்தார். தனது எழுச்சிமிக்க எழுத்துகளால், ஆங்கில ஆட்சிக்கு எதிராக மக்களை பொங்கி எழச்செய்தார்.
அந்நிய அடக்குமுறையை எதிர்த்து மேடைகளில் ஆவேசமாக உரை நிகழ்த்தினார். சென்னையில் காந்தியடிகள் முதன் முதலில் ஆற்றிய உரையை அற்புதமாக மொழிபெயர்த்து காந்தியடிகளிடம் பாராட்டு பெற்றார்.
திரு.வி.க-வின் உள்ளத்தில் காந்தியடிகளுக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. அவரை, ‘காந்தியடிகள்’ என்று முதன் முதலில் அழைத்தது திரு.வி.க-தான்.
1920-ல் நவசக்தி வார இதழைத் தொடங்கி 20 ஆண்டுகள் நடத்தினார். தன் எழுத்துகளால் தேசபக்திக் கனலை மூட்டினார்.
இதழுலகில் திரு.வி.க.வின் தொண்டு சிறப்பானது. இவரது 21-வது வயதில் தொடங்கி 70 வயது வரை அறுபதுக்கும் மேற்பட்ட அரிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
புதிய உரைநடையின் தந்தை, மேடைப் பேச்சின் தந்தை என்றும் போற்றப்பட்டார்.
தமிழ்த் தென்றல், பேச்சுப் புயல், எழுத்து எரிமலை, செய்தித்தாள் சிற்பி என்றெல்லாம் புகழப்பட்டார்.
‘தமிழ்நாட்டு காந்தியாகவும், தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும் தந்தையாகவும், தொழிலாளர்களுக்குத் தாயாகவும் விளங்கியவர்’ என்று கல்கி இவரைப் பாராட்டியுள்ளார் .
‘‘தமிழுக்குக் கிடைத்த இரு சுடர்கள்… இரு திருவிளக்குகள் மறைமலையடிகளாரும், திரு.வி.க-வும்’’ என்றார் அறிஞர் அண்ணா.
எளிமையின் உருவமாகத் திகழ்ந்தவர். சொந்தவீடு கிடையாது. செருப்புகூட அணியமாட்டார். எளிய, தூய கதராடையே உடுத்துவார்.
‘திரு.வி.க. தமிழ்’ என்று அழைக்கும் வண்ணம் புதுவகை நடையைத் தோற்றுவித்தவர்.
திரு.வி.க. ஒரு சகாப்தம் . எல்லார்க்கும் எழுத்துநடை வேறு, பேச்சுநடை வேறு. இந்த இருவேறு நடையையும் ஒன்றாக்கிப் புதியதோர் நடை படைத்தவர் திரு.வி.க. வாழ்வையே பேச்சும் எழுத்துமாக ஆக்கிக் கொண்டவர் இவர். இதனால்தான் படித்த அறிவாளிகளும் ஏடறியாத் தொழிலாளிகளும் இவரால் ஒருசேரக் கவரப்பட்டனர்.
அப்படிப்பட்ட பன்முகத் திறன்கொண்டவராக விளங்கிய திரு.வி.க., 1953-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் நாள் இவ்வுலகை விட்டு உயிர்நீத்தார்.
யார் ஒருவர் தன்னலம் கருதாது தன் மொழிக்காகவும், தன் மக்களுக்காகவும், தன் மண்ணுக்காகவும் உழைக்கிறாரோ அவருடைய வாழ்க்கை வரலாறு ஆகிறது.
திருவிகவின் வாழ்க்கை மறக்கவும் மறுக்கவும் முடியாத வரலாறு . அவர் காட்டிய சிந்தனை மரபை நாமும் போற்றிப் பாதுகாத்திட திரு.வி.க.வின் எழுத்துக்கு என்றுமே அழிவில்லை….
– நியூஸ் ஜெ செய்திகளுக்காக பாரதி கனகராஜ்
Discussion about this post