சசிகலாவின் பினாமி எனக் கூறி, புதுச்சேரி நகைக்கடை அதிபரின் 148 கோடி ரூபாயை முடக்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில், பினாமி பரிவர்த்தனை நடந்துள்ளதற்கு ஆதாரங்கள் இருப்பதாக, வருமான வரித் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 2017 ம் ஆண்டு சசிகலாவின் வீட்டில் சோதனை நடத்திய வருமான வரித் துறை அதிகாரிகள், புதுச்சேரி லட்சுமி ஜூவல்லரி உரிமையாளர் நவீன் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட 148 கோடி ரூபாய் பணத்தை, சசிகலாவின் பினாமி பரிவர்த்தனை எனக்கூறி, முடக்கி வருமான வரித் துறையினர் உத்தரவு பிறப்பித்தனர். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நவீன் பாலாஜி உள்பட 5 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு, நீதிபதி அனிதா சுமந்த் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வருமான வரித் துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், பினாமி பண பரிவர்த்தனை தொடர்பான உண்மை ஆவணங்கள் சோதனைகளின் போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 148 கோடி ரூபாயை முடக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கும் முன், மனுதாரர் தரப்பில் விளக்கம் அளிக்க போதுமான வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 18 ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
Discussion about this post