தமிழகத்தில் 7 ஆயிரத்து 316 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் மதுவிலக்கு அமலாக்க துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மது விற்பனை குறித்து நாள்தோறும் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஒரு தாசில்தார் , 3 அல்லது 4 காவல் துறையினர், துணை ராணுவத்தை சேர்ந்த ஒருவர், உதவியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோர் ஆகியோர் அடங்கிய தேர்தல் பறக்கும் படை அமைக்க முடிவு செய்யப்பட்டது. நிலையான கண்காப்பு படையிலும் இதே எண்ணிக்கையில் அலுவலர்கள் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.
திருவாரூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 50 லட்சம் ரூபாய் பிடிபட்டுள்ளதை குறிப்பிட்ட சத்தியபிரதா சாகு, வேட்பாளர்களின் சமூக வலைதள பிரச்சாரங்களும் கண்காணிக்கப்படும் என்றார். தமிழகத்தில் உள்ள 67 ஆயிரத்து 664 வாக்கு சாவடிகளில் 7 ஆயிரத்து 316 வாக்குசாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தேர்தல் நாளன்று காலை 7 முதல் 5 மணி வரை வாக்கு பதிவு நடத்தப்படும் என குறிப்பிட்டார்.தேவைப்படும் பட்சத்தில் டோக்கன் முறை மூலம் வாக்களிக்கும் நேரம் நீட்டிக்கப்படும் எனவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
Discussion about this post