தேனியில் கோடை காலத்தை ஒட்டி பறவைகள் மீது பரிவு காட்டி இரை, தண்ணீர் வைக்கும் கல்லூரி மாணவர்களின் செயல் அப்பகுதி மக்களிடம் பாராட்டுகளை பெற்று வருகிறது.
தேனி மாவட்டத்தில் சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சுமார் 40 டிகிரி வரை கொளுத்தும் வெயிலில் இருந்து பறவைகளை பாதுகாக்கும் வகையில், கல்லூரி மாணவர்கள் களம் இறங்கியுள்ளனர். நாள்தோறும் பறவைகளுக்கு தூய தண்ணீர், சோளம், கம்பு போன்ற இரை வைக்கும் பணிகளில், தன்னார்வ இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தேனி என்.ஆர்.டி. நகர், கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலைய பூங்கா, தொழிற்பேட்டை, ஆட்சியர் அலுவலக வளாகம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட, பறவைகள் அதிகம் கூடும் இடங்களில் இரை வைக்கப்படுகிறது. மின்விசிறி மூடியில் தண்ணீர் பாட்டிலை கட்டி, அதற்குள் இரை வைத்து, பிளாஸ்டிக் டப்பாவில் தண்ணீர் வைக்கின்றனர்.
நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் தண்ணீரை மாற்றியும், இரைகளை வைத்தும் தொடர்ந்து பராமரித்து வருகின்றனர். இதனால் பறவைகள் இங்கு வந்து இரைகளை உண்டு தண்ணீர் குடிப்பதுடன், உற்சாகமாக குளியலிட்டும் மகிழ்கின்றன. இந்த பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலரான விக்னேஷ்வர பாண்டியன், கோடை வெயிலால் மனிதர்களுக்கே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, பறவைகளின் நிலையை எண்ணியே இப்பணியை செய்து வருவதாக தெரிவிக்கிறார்.
கடந்த ஆண்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில், இரை வைத்து பராமரித்த இளைஞர்கள், இந்த ஆண்டும் அப்பணியைத் தொடர்ந்து வருகின்றனர். பறவைகளுக்கு இரை வைப்பது மிகுந்த மன நிறைவை தருவதாக இளைஞர்கள் கூறுகின்றனர். இவர்களின் சேவை மனப்பான்மைக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Discussion about this post