சென்னையில் 18 இடங்களில் வீடு புகுந்து திருடிய பீரோ புல்லிங் நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 177 சவரன் தங்க நகைகளை காவல்துறையினர் மீட்டனர்.
சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட சேலையூர், பீர்க்கரன்கரணை, ஆதம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றதாகத் தெரிகிறது. அவற்றை விசாரிக்க காவல் உதவி ஆணையாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இத்தனிப்படையினர் திருடு நடைபெற்ற இடங்களில் உள்ள சிசிடிவி பதிவைக் கைப்பற்றி தொடர் ஆய்வில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி, ஐஏஎஃப் சந்திப்பில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டவரின் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆராயந்தபோது துப்புத் துலங்கியது. அதில் கிடைத்த ஆதாரத்தின் படி செஞ்சியைச் சேர்ந்த நாகமணி, என்னும் பீரோ புல்லிங் திருடனை போலீசார், சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அதில் அவரிடமிருந்து 18 இடங்களில் வீடுபுகுந்து திருடிய, 177 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பீரோ புல்லிங் திருடன் நாகமணி மீது மடிப்பாக்கம், பழவந்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் இருந்தது கண்டறியப்பட்டது.
Discussion about this post