கொரோனா பரவலைத் தடுப்பதற்காக சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில், இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசின் அறிவுறுத்தலை ஏற்று மக்கள் வீடுகளிலேயே முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடின. கொரோனா பரவலைத் தடுப்பதற்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஞாயிற்றுக்கிழமையான இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் காரணமாக, சென்னையின் முக்கிய சாலைகள், மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின. காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் எந்த தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பால் கடைகள், மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், குன்றத்தூர் பஜார் வீதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விதிகளை மீறி வெளியில் சுற்றுவோருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைக்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. அவசர கால ஊர்திகள் தவிர மற்ற வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினர். கொரோனா வீரியத்தை உணர்ந்து, வீட்டை விட்டு வெளியே வராமல் பொறுப்புடன் நடந்து, தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை முழுமையாக கடைபிடித்தனர்.
Discussion about this post