காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சீராக மழை பெய்ததால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து தொடர்ந்து 2 ஆயிரத்து 200 கன அடியாக நீடித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை குறைந்ததால், பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து குறைந்தது. இந்த நிலையில், தற்போது மழை சீராக பெய்வதால், நீர்வரத்து தொடர்ந்து 3வது நாளாக 2 ஆயிரத்து 200 கன அடியாக நீடிக்கிறது. பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி ஒகேனக்கல் அருவிக்கும் நீவரத்து குறைந்த போதிலும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 146வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் 4 வது முறையாக அதன் முழு கொள்ளளவை எட்டியது. காவிரி டெல்டா பாசன தேவை அதிகரித்ததால், அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு 2 ஆயிரம் கன அடியில் இருந்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
காலை நிலவரப்படி அணையின் நீர்வரத்து ஆயிரத்து 926 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 118.63 அடியாகவும், நீர் இருப்பு 91.30 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 600 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.