சபரிமலையில் வயது பாகுபாடின்றி பெண்களை அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட், கன்வில்கர், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்த இந்த வழக்கில், கேரள அரசு, தேவசம் போர்டு, ஆன்மீக அமைப்புகள் தனித்தனியாக தங்களது வாதங்களை தாக்கல் செய்தனர். அப்போது, சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே தங்களது நிலைப்பாடு என கேரள அரசின் சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஆண்களைப் போல பெண்களுக்கும் வழிபாடு நடத்த உரிமை உள்ளது என்று தெரிவித்தனர். பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் கருத்து தெரிவித்தனர். குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் கோயிலுக்கு வருவது ஆகம விதிகளை மீறுவது என தேவசம் போர்டு சார்பில் வாதிடப்பட்டது. இந்தநிலையில், வழக்கின் அனைத்து தரப்பு விசாரணையும் நிறைவடைந்துள்ளநிலையில், எழுத்துப்பூர்வமான வாதங்களை 7 நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய, நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Discussion about this post