திமுக தலைவர் ஸ்டாலின் மீது தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக அரசு மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சரை விமர்சித்து பேசியிருந்தார். இந்த செய்தி முரசொலி மற்றும் தினகரன் பத்திரிகையில் வெளியானது. இதையடுத்து, தமிழக அரசு வழக்கு தொடர்வது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சார்பில் சென்னை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசுக்கும், அமைச்சருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறாக பேசிய ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை விரைவில் வரவுள்ளது.
அவதூறு வழக்கில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகிற 21ந் தேதி ஆஜராகும் படி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் மற்றும் தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சீமான் பேட்டியளித்திருந்தார். இதனையடுத்து, அவதூறாக பேசிய சீமான் மீது, அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் நகர குற்றவியல் வழக்கறிஞர் கௌரி அசோகன் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் மனுவை விசாரித்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், வரும் 21ந் தேதி சீமான் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
Discussion about this post