இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தமிழக எல்லைப்பகுதியில் உள்ள மக்கள் கர்நாடகா மற்றும் ஆந்திராவில் உள்ள மதுக்கடைகளுக்கு செல்வது அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இருப்பினும் தமிழகத்தில் மதுபானக் கடைகள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்படும் என அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகள் திறக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே உள்ள மதுக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும் எனவும், மதுக்கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனிநபர் இடைவெளி 6 அடி தூரமாக கடைப்பிடிக்கப்படுவதுடன், ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கூட கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மதுபானக்கடைகளிலும் தேவைக்கு ஏற்ப கூடுதல் நபர்களை பணியமர்த்தி கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், மதுபானக் கடைகள் திறக்கப்பட்டாலும் பார்களை திறக்க அனுமதி இல்லை என்றும் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post