ஆவின் தயாரிப்புகள் குறித்து, தமிழ்நாடு பால் முகவர் தொழிலாளர் நல சங்கத் தலைவர் சுய விளம்பரத்திற்காக தவறான அறிவிக்கை வெளியிட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆவின் மோர், சாக்லேட் மற்றும் மேங்கோ லெஸ்ஸி உள்ளிட்ட 5 வகையான புதிய பால் பொருட்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பால் முகவர் தொழிலாளர் நல சங்கத் தலைவர் பொன்னுசாமி, ஐந்து பொருட்களும் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டவை என தவறான அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும், இந்த அறிக்கை உண்மைக்குப் புறம்பானது எனவும் கூறப்பட்டுள்ளது. லஸ்ஸியை பொறுத்தவரை சாக்லேட் மற்றும் மாம்பழ சுவைகளில் 2 வகைகளில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், மோர் வகைகளில், இஞ்சி, மஞ்சள், துளசி, சீரகம் போன்ற மூலிகைப் பொருட்கள் சேர்த்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசின் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துறை பரிந்துரை அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா காலத்திலும், தங்குதடையின்றி மக்களுக்கு பால் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும், இதனை பொறுக்கமுடியாத பொன்னுசாமி போன்றோர், விளம்பரத்திற்காக உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு, ஆவின் செயல்பாடுகளை குறை கூறுவதையே தொழிலாகக் கொண்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
Discussion about this post