ராமசாமி படையாட்சியாருக்குத் தமிழக அரசின் சார்பில் மணி மண்டபம் இன்று திறக்கப்பட உள்ளது.
1918ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி பிறந்த சிவ சிதம்பர ராமசாமி படையாட்சிரை மக்கள் எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் என அழைத்தனர். சுதந்திரப் போராட்ட வீரரான இவர், தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை 1951ஆம் ஆண்டில் தோற்றுவித்தார். 1952ஆம் ஆண்டில் நடந்த சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் இவரது தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி சட்டப் பேரவையில் 19 இடங்களிலும், நாடாளுமன்ற மக்களவையில் 4 இடங்களிலும் வெற்றி பெற்றது. ராமசாமி படையாட்சியார் சட்டமன்ற உறுப்பினரானார்.
அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 152 பேரவை இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில், தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் ஆதரவால்தான் காங்கிரசின் ராஜாஜி தமிழக முதல்வரானார். பின்னர் 1954ஆம் ஆண்டில் கர்மவீரர் காமராசரின் அமைச்சரவையில் ராமசாமி படையாட்சியாருக்கு உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பொறுப்பு அளிக்கப்பட்டது.
பின்னர் 1980 மற்றும் 1984ஆம் ஆண்டுகளில் திண்டிவனம் மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கும் ராமசாமிப் படையாட்சியார் மக்களால் அனுப்பப்பட்டார். இப்படிப் பல சிறப்புகளைப் பெற்ற இவர், கடந்த 1992ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி மறைந்தார். அந்நிலையில் 1993ஆம் ஆண்டில் தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து விழுப்புரத்தைத் தலைநகரமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவான போது அது, ‘விழுப்புரம் இராமசாமி படையாட்சியார் மாவட்டம்’ – என்றுதான் பெயரிடப்பட்டது. பின்னரே அது ‘விழுப்புரம் மாவட்டம்’ – என்று மாறியது.
தமிழக அரசியலில் மிக முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராமசாமிப் படையாட்சியாரின் நினைவைப் போற்றும் வகையில், அவரது பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அத்தோடு கடலூரில் ராமசாமி படையாட்சியாருக்கு மணிமண்டபம் கட்டத் திட்டமிடப்பட்டு அதற்கான அடிக்கல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் நாட்டப்பட்டது.
இதன் தொடர்ச்சியாகத் தமிழக சட்டப் பேரவையில் சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியாரின் திருவுருவப் படம் திறக்கப்பட்டது. இன்று நடைபெறும் விழாவில் ராமசாமிப் படையாட்சியார் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து அவரது புகழுக்கு மேலும் அணி சேர்க்கவுள்ளார்.
Discussion about this post