வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மங்கலம், சோமசிபாடி, கழிக்குளம், வேடந்தவாடி, எரும்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் நேரம் பரவலாக மழை பெய்தது. கடந்த சில நாட்கள் வெயில் வாட்டி வதைத்த நிலையில் திடீர் மழையால் ஏற்பட்ட குளிர்ச்சியான சூழல் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, கந்திலி, புதுப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மழை பெய்தது. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், நிலக்கடலை, சோளம், கம்பு, வரகு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
Discussion about this post