காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து சோனியாகாந்தி விலகும் நடவடிக்கை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுமார் 20 ஆண்டுகள் கட்சியிலும் ஆட்சியிலும் சோனியா காந்தி வகித்த பதவிகள் என்ன ? 1946 ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்த சோனியா, லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தபோது ராஜீவ் காந்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டு இந்தியா வந்தார்.
1991 ஆம் ஆண்டு ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் கூட, சோனியா அரசியலில் ஈடுபாடு காட்டவில்லை.
1997 காலகட்டத்தில் உட்கட்சி குழப்பத்தால் திண்டாடி வந்தது காங்கிரஸ். இதையடுத்து மூத்தத் தலைவர்களின் வற்புறுத்தலின் பேரில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவியேற்றார் சோனியா.
1997ல் காங்கிரசில் சேர்ந்த சோனியா காந்தி தனது முதல் பிரசார கூட்டத்தை தமிழகத்திலிருந்து துவங்கினார்.
1999ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சியமைத்த நிலையில், சோனியா காந்தி எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டார்
2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இடது சாரிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ்.
இதைத் தொடர்ந்து அவர் பிரதமர் பதவியை ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மன்மோகன் சிங் இந்தியாவின் பிரதமரானார் அதற்கு பதிலாக பிரதமருக்கு ஆலோசனை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட தேசிய ஆலோசனைக் குழுவின் தலைவராக பொறுப்பேற்றார் சோனியா. சோனியா காந்தியின் தலைமையின் கீழ் காங்கிரஸ், 2009 மக்களவைத் தேர்தலில் 206 இடங்களில் வெற்றி பெற்றது.
2009 முதல் 2014 வரையிலான ஆட்சிகாலத்தில், காங்கிரஸ் அரசு மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் வெளிவந்தன. இதனால் 2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. வயது மூப்பு மற்றும் உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளால் 2017ம் ஆண்டு காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து சோனியா காந்தி விலகினார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சித் தலைவராக பதவியேற்ற ராகுல் காந்தி 2 ஆண்டுகள் அப்பொறுப்பை வகித்தார். 2019 மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் பதவியை ராஜினாமா செய்யவே, காங்கிரசின் தற்காலிகத் தலைவராக பொறுப்பேற்றார் சோனியா.
இந்நிலையில் திங்களன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சோனியா காந்தி அறிவித்தார். புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை தற்காலிகத் தலைவர் பதவியில் தொடருமாறு மூத்த நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அடுத்த 6 மாதங்கள் கட்சியின் தலைமைப் பொறுப்பில் சோனியா நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post