சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுகவின் வெற்றிக்கு பாமகவினர் உழைக்க வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி உடன்பாட்டின்படி இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை பாட்டாளி மக்கள் கட்சி ஆதரிப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவர்களின் வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டிய கடமை பா.ம.க.வுக்கு உள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையின் போது அதிமுக கூட்டணி கட்சியினரிடையே அற்புதமான ஒருங்கிணைப்பு நிலவியதாக பாராட்டியுள்ள மருத்துவர் ராமதாஸ், அனைத்துத் தொகுதிகளிலும் நமது வேட்பாளர் தான் போட்டியிடுகிறார் என்று கருதி அதிமுக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சியினரும் பணியாற்றியதாக பெருமிதம் தெரிவித்தார். அத்தகைய அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட உழைப்பின் காரணமாகத் தான் 38 மக்களவைத் தொகுதிகளிலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களின் வெற்றி சாத்தியமாகி இருக்கிறது எனவும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று 4 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களிலும் அதே ஒருங்கிணைப்பு மற்றும் அசாத்தியமான தேர்தல் பணிகள் தொடர வேண்டும் என்றும், 4 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு உறுதியாக வேண்டும் என்பதை மனதில் கொண்டு இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பாமகவினர் கடுமையாக உழைக்க வேண்டும் மருத்துவர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
Discussion about this post