தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய சீருடை மாற்றம், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஒருவரின் தன்நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதில் ஆடைகளுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. அந்த வகையில், வளரும் சமூதாயத்தை கட்டி எழுப்பும் மாணவர்கள், தன்நம்பிக்கையை பெறவும், கல்வியில் ஆர்வத்தை ஊக்குவிக்கவும், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்று, தனியார் பள்ளிகளுக்கு நிகராக, அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய சீருடை மாற்றம்.
இதன் அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கடந்த 2017ஆம் ஆண்டு நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அறிவித்தார். தொடர்ந்து, இந்த ஆண்டு முதல் புதிய சீருடைகள் அணிந்துவர மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, கரும் பச்சை நிறத்தில் கால் சட்டை மற்றும் இளம் பச்சை நிறத்தில் கட்டமிடப்பட்ட மேல் சட்டை வழங்கப்படவுள்ளது. இதேபோல், 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வரை பயிலும் மாணவர்களுக்கு, சந்தன நிறத்தில் கால் சட்டை மற்றும் சந்தன நிறத்தில் கட்டமிடப்பட்ட மேல் சட்டை வழங்கப்படவுள்ளது. மாணவியருக்கு சந்தன நிறத்திலான கோட் வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில் வரும் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால், பெற்றோர் பள்ளி சீருடை வாங்குவதில் ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி, அரச்சலூர், சென்னிமலை உள்ளிட்ட பகுதிகளில் தயாராகும் சீருடைகள், ரெடிமேடுகளாகவும், தைப்பதற்கு தகுந்த துணிகளாகவும், தினசரி ஜவுளி சந்தைகளுக்கு விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. குறைந்த விலையில் தரமான சீருடைகள் விற்பனையில் இறங்கியுள்ளதால், பெற்றோர் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். ஈரோடு மட்டுமின்றி, வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் சீருடைகளை வாங்கிச் செல்கின்றனர். தனியார் பள்ளிகளுக்கு நிகரான அரசு பள்ளிகளின் சீருடை, பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. சீருடைகளின் விற்பனை அதிகரித்துள்ளதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பள்ளி திறக்கும் நாளிலேயே மாணவர்களுக்கான இலவச சீருடையும், புத்தகங்களும் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது, கூடுதல் மகிழ்ச்சிதரும் விஷயமாக அமைந்துள்ளது.
Discussion about this post