தற்போது நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு முறை பாதிக்கப்படாமல், புதிய இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், குடும்ப வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கு குறைவாக உள்ளவர்களுக்கு, அவர்களுடைய குடும்ப சொத்துக்களின் அடிப்படையில் புதிய இட ஒதுக்கீடு வழங்கப்படவுள்ளது என்று தெரிவித்தார்.
கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு தொடர்ந்து கட்டிக் காத்து வருவதாகவும் துணை முதலமைச்சர் தனது பேச்சின்போது குறிப்பிட்டார். 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான இந்திய மருத்துவக் குழுமத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாநில அரசு விண்ணப்பித்தால் கூடுதலாக ஆயிரம் மருத்துவப் பட்டப்படிப்பு இடங்களை பெற வாய்ப்புள்ளதாக கூறிய அவர், இதன் மூலம் அகில இந்திய ஒதுங்கீட்டிற்கான 150 இடங்கள் போக தமிழக அரசின் ஒதுகீட்டிற்கு 850 இடங்கள் கூடுதலாக கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
Discussion about this post