முதுமலை புலிகள் காப்பகத்தில் வன உயிரினங்களை கணக்கெடுக்கும் பணி இன்று துவங்கியுள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் முதுமலை, கார்குடி, தெப்பக்காடு, மசினக்குடி உள்ளிட்ட சரகங்கள் அடங்கிய வனப்பகுதிகளில் இன்று காலை வன உயிரினங்கள் கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. 29 பகுதிகளாக நடைபெறும் இந்தப் பணிகள் வரும் 23ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு பகுதிகளிலும் மூன்று வனத்துறை பணியாளர்கள் அடங்கிய குழுக்கள் களப்பணியில் ஈடுபடுகின்றனர். விலங்குகளின் கால் தடங்கள், எச்சம், மரங்களில் காணப்படும் அடையாளங்கள், நேரடி பார்வை உள்ளிட்ட முறைகளில், இந்த கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. ஆண்டுதோறும் பருவமழைக்கு பிந்தைய நாட்களில் நடைபெறும் இந்த கணக்கெடுப்பு பணிகள் குறித்த தகவல்கள், தேசிய புலிகள் காப்பக ஆணையத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post