கர்நாடக அரசில் பள்ளிக்கல்வி துறை அமைச்சராக இருந்த என். மகேஷ் எம்.எல்.ஏ, அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் முதலமைச்சர் குமாரசாமிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி செய்து வருகிறது. அதே நேரம் சட்டசபையில் அதிக உறுப்பினர்களை கொண்ட பாரதிய ஜனதா கட்சி, மீண்டும் ஆட்சியில் அமர முயற்சித்து வருகிறது.
குமாரசாமியின் கூட்டணி அரசு விரைவில் கவிழும் என கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா அடிக்கடி கூறி வருகிறார். இதை காங்கிரஸ் தலைவர்கள் மறுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கர்நாடகாவில் பள்ளிக்கல்வி துறை அமைச்சராக இருந்த என். மகேஷ் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் பகுஜன் சமாஜ்வாடி கட்சியில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட ஒரே உறுப்பினராவார்.
இதற்கிடையே எம்.எல்.ஏ மகேஷ், தனது ராஜினாமா குறித்து எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை.
கர்நாடகாவில் ஆளும் கூட்டணி அரசில் என்.மகேஷ் , எம்.எல்.ஏ வையும் சேர்த்து 118 பேர் உள்ளனர். பாஜகவுக்கு 104 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். தற்போதைய சூழலில் ஆட்சிக்கு ஆபத்து இல்லாவிட்டாலும் , மகேசின் ராஜினாமா, குமாரசாமிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.