நீளமான முடியே பெண்களுக்கு அழகு எனப் பலர் கூற நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் தற்போது உள்ள பெண்கள் தங்களது தலை முடிகளை விதவிதமாகக் கத்தரித்துக்கொண்டு அதற்கு ரசாயனங்கள் பூசுவதே அழகு என்கின்றனர். இதற்கு மாறாகச் சீனா அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் பெண்கள் 6 அடிக்கு குறையாமல் தங்களது தலை முடியை வளர்த்து வருகின்றனர்.
சீனாவின் ஹாங்க்லோ கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கள் தலைமுடிகளை நீளமாக வளர்ப்பதைத் தெய்வீகமாக நினைத்து 6 அடிக்குக் குறையாமல் வளர்த்து வருகின்றனர்.
கடந்த 1000 ஆண்டுகளாக இந்த வழக்கத்தை அப்பகுதி மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். ஆம். இந்த நீள முடியை பராமரிப்பதற்காக இப்பகுதி மக்கள் ஒரு சடங்கே நடத்தி வருகின்றனர். இதனால் நீள தலை முடி கொண்ட பெண்கள் வாழும் இடம் என கின்னஸ் உலக சன்றிதழும் இப்பகுதிக்கு கிடைத்துள்ளது.
சிறு வயது முதல் நீளமாக வளர்த்த முடியினை தன்னுடைய பதினேழாவது வயதில் முதல் முறையாக வெட்டுகின்றனர். இந்த முடியை வெட்டுவதற்கு ஒரு சடங்கு நடத்தப்படும். அதில் வெட்டிய முடியை அவர்களின் தாயின் முடியோடு இணைத்து வழிபடுகின்றனர். பின்னர் அந்த முடிகளை நீரில் நனைத்துக் கடவுளுக்கு காணிக்கையாக்குகின்றனர்.
அதன் பிறகு தங்களது தலைமுடியை ஒரு சுழல் போல் அமைத்து அதில் ஒரு துணியைத் திருமணம் ஆகாத பெண்கள் தலையில் சூடுகின்றனர். பின்னர் தங்களுக்கு எப்போது திருமணம் நிகழ்கிறதோ அப்போது இந்தத் துணியை அகற்றுவது வழக்கமாம்.
இப்பகுதியில் வாழும் அனைத்துப் பெண்களின் முடி நீளமும் 6 அடிக்கு குறையாமல் இருப்பது ஆச்சர்யமான ஒரு தகவலாகவே உள்ளது. பெரும்பாலும் இக்கிராம பெண்கள் 8 அடி வரை தங்களது முடியை பராமரித்து வருகின்றனர்
ஊற வைத்த அரிசி தண்ணீரில் பொமலோ என்ற ஒரு வகைப் பழத்தின் தோல் மற்றும் தேயிலை தவிடு ஆகியவற்றைக் கலந்து கொதிக்க வைக்கின்றனர். இவ்வாறு கொதிக்க வைத்த தண்ணீரை கொண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை தங்களது தலை முடியில் தடவுகின்றனர்.
சுற்றுலா பயணிகள் பலரும் இப்பகுதி மக்களைக் காண ஆவலுடன் வந்து செல்லுகின்றனர்.1000 ஆண்டுகளாக தலைமுடி பராமரிக்கும் பாரம்பரியத்தை கடைபிடித்து வருவது பல்வேறு தரப்பினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Discussion about this post